சென்னை :
சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப்போவது இல்லை என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவாரா?
பதில்:- சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு எதுவும் செய்யப்போவது இல்லை. படம் வெளிவரும் போது விளம்பரத்துக்காக பேசுவார்கள். அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என பலமுறை கூறிவிட்டார். ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.
கே:- மக்கள் நலனுக்காக ரஜினி-கமல் இணைவோம் என கூறி இருக்கிறார்களே?
ப:- இதுபோன்ற சினிமா வசனங்களை கேட்டு கேட்டு அலுத்துவிட்டது.
கே:- மகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆட்சி அமைத்ததின் பின்னணி என்ன?
ப:- மகாராஷ்டிரா விவகாரம் குறித்து எனக்கு தகவல் தெரியாது. அம்மாநில அரசியலில் முதலில் இருந்தே நான் கவனம் செலுத்தவில்லை. ஆகையால் அதில் இப்போது கருத்து ஏதும் கூற முடியாது.
கே:- சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை ஆவாரா?
ப:- அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அவரை சிறைக்கு அனுப்பியதில் என்னுடைய வழக்கும் இருந்தது. அவருடைய தண்டனை காலம் முடிவதற்கு இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது.
கட்சியை நல்ல முறையில் அமைப்புகளோடு நடத்துவதற்கு சசிகலாவுக்கு திறமை உள்ளது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் அ.தி.மு.க.வினர் கட்டாயம் சசிகலா பக்கம் தான் செல்வார்கள் என எதிர் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.